விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் தாலுகா வி.வேடப்பட்டி கிராம தேசிய விவசாயிகள் சங்க விவசாயிகள் நேற்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரவி நாயுடு முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் விளாத்திகுளம் தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், 'எங்கள் ஊரில் சுமார் 2 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறோம். இங்கு 3 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். அதில் சுமார் 1,000 ஏக்கர் நிலங்கள் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறுகிறது. இதனை நம்பி மிளகாய், பருத்தி, கொய்யா, எலுமிச்சை, தென்னை, வாழை போன்ற பயிர்களை பயிரிடுவதுடன் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறோம். எங்கள் ஊரில் காற்றாலை நிறுவ பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். காற்றாலை அமையும் பட்சத்தில் விவசாயம் முழுமையாக அழியும் சூழ்நிலை உள்ளது. இதை அரசு தடுக்கவில்லை என்றால், ஊரை காலி செய்து ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைப்போம். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு காற்றாலையை முற்றிலும் தடை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட தலைமையிடத்து துணை தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.