கள்ளக்குறிச்சியில் நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு - கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர்மீனா அருள், வேளாண்மை இயக்குனர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
விவசாயிகள் எதிர்ப்பு
அதன்படி, தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி சீனிவாசன் பேசுகையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் (21-4-2023) -ந் தேதி நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டம் விவசாயிகளை பாதிக்கும் மிக மோசமான சட்டமாகும்.
இதில் முப்போகமும் சாகுபடி செய்யக்கூடிய நிலத்தையும் எந்தவிதமான தங்கு தடையின்றி கையகப்படுத்தலாம். அதே போல் ஏரி, குளங்களை தனியாருக்கு கொடுக்கலாம் என உள்ளது.இது விவசாயமும், நீர் நிலையும் பாதிக்கும் சட்டமாகும்.எனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்று தொிவித்தார்.
அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த விவசாயிகள் அனைவரும் கைத்தட்டி இந்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எழுந்து நின்றனர். உடன் அதிகாரிகள், அங்கிருந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கை ரத்து செய்ய வேண்டும்
அருள்தாஸ்:- கூத்தக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் செய்யவேண்டும் என போராடிய 5 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
வாசுதேவன்:- தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேமாலூர் ஊராட்சியில் வீடு வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், 100 நாள் வேலைத்திட்டத்தில் வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு கூலி வழங்கியதாகவும் முறைகேடு நடந்துள்ளது இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பலராமன்:- கரும்பு வெட்டுவதற்கு கட்டிங் ஆர்டர் கொடுப்பதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் கட்டிங் ஆர்டர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை
கிருஷ்ணமூர்த்தி:- கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.உரங்கள் வாங்கும்போது பில் கொடுப்பதில்லை இதனை வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இவ்வாறு விவசாயிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வேளாண்மைதுறை துணைஇயக்குனர் (திட்டம்) சுந்தரம், மின்சார துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் கழக மண்டல மேலாளர் அவ்வைமணி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.