காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்


காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:40+05:30)

விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதி செய்துதரக்கோரி பாண்டிக்கண்மாய் பாசன விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதி செய்துதரக்கோரி பாண்டிக்கண்மாய் பாசன விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வறட்சி

பரமக்குடி தாலுகா பாண்டிக்கண்மாய் வருவாய் குரூப் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பாண்டிக்கண்மாய் வருவாய் கிராமத்தில் உள்ள திருவாடி, டி.கருங்குளம், உய்யனேந்தல், இலந்தைக்குளம், பாண்டிக்கண்மாய், நிலையாம்படி, பனையடியேந்தல், பெரியசாக்காள், சின்னசாக்காள், கண்டுகொண்டான் மாணிக்கம் ஆகிய கிராமங்களுக்கு வைகை ஆற்றிலிருந்து மஞ்சூர் கால்வாய் வழியாக வடிநீர் கால்வாய் மூலம் பாண்டிக்கண்மாய் கண்மாய்க்கு நீர்ப்பாசனம் வந்தால் மட்டுமே மற்ற கிராமங்கள் பாசன வசதி பெறும்.

ஆனால், மஞ்சூர் கண்மாய் வடிகாலுக்கும், வைகை ஆற்றின் கால்வாய்க்கும் சரியான வரத்து கால்வாய் அணை இல்லாத காரணத்தால் மஞ்சூர் கண்மாயிலேயே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் அதனை நம்பி உள்ள மற்ற 17 கண்மாய்களும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

நீர்ப்பாசன வசதி

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் பெய்யாததால் தண்ணீரின்றி வயல்கள் வறண்டுவிட்டன. நஞ்சை நிலங்களின் பயிர்கள் கருகி விதை நெல்லுக்கு கூட விளையாமல் போய்விட்டது. இதனால் மஞ்சூர்-வைகை கால்வாய் சீரமைப்பு செய்து எங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு நிவாரணமும், பயிர்காப்பீடு இழப்பீடும் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story