30 ஏக்கர் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்த விவசாயிகள்


30 ஏக்கர் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாற்று நட்டு 40 நாளில் கருகியதால் 30 ஏக்கர் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழவு செய்து விவசாயிகள் அழித்தனர்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தில் விவசாயிகள் வழக்கம்போல் இந்த ஆண்டும் மழையை நம்பி சம்பா நெற்பயிர் சாகுபடி செய்தனர். இதில் 30 ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடவு செய்து 40 நாட்களில் கருவிட்டது. நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம் பாய்த்தும் நெற்பயிர் உயிர்பெறவில்லை.

இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி டிராக்டர் மூலம் 30 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை அழித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மழையை நம்பி சம்பா நெற்பயிர் சாகுபடி செய்தோம். விதை, நடவு கூலி, உழவு எந்திர வாடகை உள்ளிட்டவைகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளோம்.

பெருத்த நஷ்டம்

நாங்கள் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாறாக வெப்ப காற்று வீசி வருகிறது. பருவநிலை மாற்றத்தால் சம்பா நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லை. நடவு நட்டு 40 நாளில் நெற்பயிர்கள் கருகி விட்டது. இதனால் டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்து விட்டோம். இது எங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசும், வேளாண் துறையும் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் கருகுவதற்கான காரணத்தை ஆய்வு செய்து கருகாமல் தடுக்க மாற்று வழி உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.


Next Story