விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

குறுவை காப்பீடு செய்ய அனுமதி வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திருவாரூர்


குறுவை காப்பீடு செய்ய அனுமதி வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தில் 2-வது ஆண்டாக குறுவை காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) பிரிமியம் செலுத்துவதற்கான இறுதி கெடு முடிகிறது. எனவே குறுவை பயிர் காப்பீடு செய்ய அனுமதியை தமிழக அரசு வழங்க கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

விவசாயிகள் அச்சம்

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது

தமிழகத்தில் 2-வது ஆண்டாக குறுவை பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதிக்குள் பிரிமியம் செலுத்துவதற்கான இறுதி கெடு முடிவடைய உள்ள நிலை உள்ளதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். தற்போது 5 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் குறுவை நடைபெற்று வருகிறது. காப்பீடு செய்ய முடியாத நிலையில், தொடர்ந்து பருவம் மாறி பெய்யும் மழையால் குறுவை சாகுபடி அழிந்து போகும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.குறுவை காப்பீடு செய்ய 2-வது ஆண்டாக இதுவரையிலும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே தமிழக அரசு குறுவை பயிர் காப்பீடு செய்ய அனுமதி வழங்கி பிரிமியம் செலுத்துவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவா் கூறினார்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் குறுவை காப்பீடு குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். இதன்பேரில்தமிழக காவிரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story