செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தின்போது செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தின்போது செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாண் துறை இணை இயக்குனர் அகண்டராவ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காவிரி பாதுகாப்பு விவசாய சங்கத்தினர், அனைத்து மாநிலங்களிலும் பொது வினியோக முறை, மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை வினியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை கண்டித்து, கலெக்டர் அலுவலக நுழைவாயிலுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாரம்பரிய அரிசி
போராட்டத்தில் உணவு வழங்கும் திட்டத்தில் ரசாயனம் கலந்த அரிசியை எந்தவித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உணவோடு கலக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் மக்களின் உடல்நலனை பாதுகாக்க கூடிய சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவனி போன்ற பாரம்பரிய ரக அரிசிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
மணியன்:- வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தில் நடுக்காடு, வடகாலை இணைக்கும் கோட்டகம் ஏரியை தூர்வார வேண்டும்.
தமிழ்ச்செல்வன்:-
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வார வேண்டும்.
இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்
கமல்ராம்:- பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனத்திடம் இருந்து உரிய காப்பீட்டு இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். நெல் கொள்முதல் அடிப்படையில் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புகளை செய்ய வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ள முறைகேடான குடிநீர் இணைப்புகளையும், மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன்:- குளங்கள், ஏரிகள், ஆறுகள் தூர்வாரும் பணிகளை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி தண்ணீர் திறப்பதற்குள் முடிக்க வேண்டும்.
கண்ணன்:- பட்டமங்கலத்தில் குடிநீர் உப்புத்தன்மையாக உள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி தகுதி அடிப்படையில் வேலை
முஜீபுஷரீக்:- வெண்ணாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட ராஜன்வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகுமார்:- சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்க பணிகளுக்காக, தற்போது விளை நிலங்களை விவசாயிகள் கொடுப்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை உள்ளது. நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.