விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி;
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்ற நிலையில் ரூ.80 ஆயிரம் கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்து, வேலையிழப்பு ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். குடும்பத்துக்கு 100 நாள் வேலை என்பதை மாற்றி, பதிவு அட்டைதாரர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ. 281 தொகையினை முழுமையாக வழங்கிட வேண்டும். இத்திட்டத்தில் பணிபுரிய மென்பொருள் செயலி மூலம் பதிவு செய்யும் முறையை மாற்றி மாஸ்டரோல் நோட்டு மூலம் பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
--