சிப்காட் விரிவாக்க பணிக்கு நில ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரும்புலிமேடு கிராம பகுதியில் சிப்காட் விரிவாக்க பணிக்கு நில ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பெரும்புலிமேடு கிராம விவசாயிகள் சிப்காட் திட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி நேற்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிப்காட் நில விரிவாக்கத்திற்கு விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என பல்வேறு முறை கோரிக்கைகளை வைத்து வருகிறோம்.
ஆனால் செய்யாறு சிப்காட் விரிவாக்கப் பணிக்காக பெரும் புலிமேடு கிராமத்தில் பெரும் பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ரோட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் பெரும் புலிமேடு கிராமத்தில் உள்ள நன்செய் நிலங்கள் மாமண்டூர் ஏரி பாசனத்தின்கீழ் உள்ளது. நிலத்தை கையகப்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் பெரும்புலிமேடு சிப்காட் திட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.