கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டம்


கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டம்
x

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நாமக்கல்

மோகனூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

மோகனூர் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மனு கொடுக்கும் போராட்டம், மெழுவர்த்தி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி, நாமம் போட்டு போராட்டம், தீர்த்தக்குட போராட்டம், அக்னி சட்டி போராட்டம், புத்தகம் வாசிக்கும் போராட்டம், கோவில்களில் வேண்டுதல் வைக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்

இந்த நிலையில் நேற்று வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் ரவி, கொ.ம.தே.க. ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், தமிழக விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட திரளான விவசாயிகள், பொதுமக்கள், போராட்டத்தில் கலந்துகொண்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.


Next Story