வடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு


வடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
x

வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அளித்தனர்.

அவர்களது மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

இதில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தடை விதிக்க வேண்டும்

கூட்டத்தில் வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தைச் சார்ந்த விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வடமாவந்தல் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைய உள்ளது. நாங்கள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றோம். இந்த கல்குவாரி அமைந்தால் சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கர் நிலம் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இது குறித்து பொதுமக்கள் சார்பில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் ஆரம்ப கால பணி நடைபெற அனுமதி அளித்துள்ளனர்.

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தில் கிரஷர் மற்றும் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பஸ் வசதி வேண்டும்

தண்டராம்பட்டு தாலுகா மலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மேல்நிலை வகுப்பு பயில்வதற்க்கு மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் இருந்து தானிப்பாடி மேல்நிலைப்பள்ளிக்கும், தண்டராம்பட்டு மேல்நிலைப் பள்ளிக்கும் சென்று வருகிறோம்.

மலமஞ்சனூர் புதூரில் இருந்து 4 கிலோ மீட்டர் வரை நடந்து செல்வதனால் பள்ளிக்கு கால தாமதம் ஏற்படுவதால் சரிவர கல்வி கற்க முடியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story