குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:46 PM GMT)

கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற்று தரக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்


கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற்று தரக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டம்

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து விவசாயிகளும் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு காவிரியில் போதிய தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், காவிரி மேலாண்மை மூலம் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நீரை பெற்று தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

சேதுராமன்:- நடப்பாண்டு பருத்தி, குறுவை நெல் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க, கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் கேட்டு பெற வேண்டும்.

தோட்டக்கலை பண்ணை

பாலகுமாரன்:- மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூரில் தோட்டக்கலை பண்ணை அமைத்து பழங்கன்று, காய்கறி கன்று ஆகியவை வழங்கப்படுகிறது. அதே போல் திருவாரூரில் அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

முகேஷ்:- மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டுமானால் டிராக்டர் வைத்திருக்க கூடாது என்ற விதியை தளர்த்த வேண்டும். சாகுபடி குறித்து சரியான விவரங்களை வருவாய் துறையினர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறுவை-சம்பா சாகுபடி

தொடர்ந்து கலெக்டர் சாருஸ்ரீ பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில், குறுவை 36 ஆயிரத்து 914 எக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி 1 லட்சத்து 53 ஆயிரத்து 808 எக்டேரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், குறுவை 11 ஆயிரத்து 603 எக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 18 ஆயிரத்து 918 எக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 5 ஆயிரத்து 943 எக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

உழவன் செயலி

டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.75.95 கோடி மதிப்பில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமி காந்தன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், செயற்பொறியாளர் (வெண்ணாறு வடிநிலக்கோட்டம்) ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story