பொள்ளாச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கோவில் நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி, ஏப்.26-
கோவில் நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் நிலம் ஏலம்
பொள்ளாச்சி அருகே உள்ள கூளநாயக்கன்பட்டியில் உள்ள சின்ன முத்தையாசாமி கோவில், பொம்மையசாமி கோவில் மற்றும் ஜக்காளம்மன் கோவில் உள்ளன. இந்த கோவிலுக்கு சொந்த நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதை கண்டித்து ஏற்கனவே கடந்த 21-ந்தேதி கூளநாயக்கன்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் உள்ள அலுவலகத்தில் நேற்று ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கூளநாயக்கன்பட்டியில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் அய்யப்பன் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதையொட்டி கோவிலுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கோவில் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏலம் ஒத்திவைப்பு
அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அதற்கு அவர்கள் ஏலத்தை ரத்து செய்தால் தான் கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். இதற்கிடையில் கோவில நிலங்களை ஏலம் எடுக்க முன் வராததால் நேற்று ஏலம் நடந்த ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அய்யப்பன் கோவில் பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதனன் என்பவர் கூறியதாவது:-
கடந்த 250 ஆண்டு காலமாக அந்த கோவில் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களே கோவில்களில் கும்பாபிஷேகம் செய்து கோவிலை வணங்கி வருகின்றனர். வேறுசமூகத்தினர் அந்த கோவிலுக்கு வருவதில்லை. இந்த நிலையில் கோவில் நிலத்தை ஏலம் விடுவதற்கு தக்காரும், உதவி ஆணையரும் செயல்பட்டு வருகின்றனர். கூளநாயக்கன்பட்டியில் உள்ள கோவில் நிலங்களை எந்த காரணத்தை கொண்டும் ஏலத்திற்கு கொண்டுவரக் கூடாது. அனுபவ பாத்திர அடிப்படையில் இந்த விவசாயிகளிடம் நிலம் இருக்கவேண்டும். இந்த விவசாயிகளை பாதுகாக்கிற அடிப்படையிலே இங்கே காத்திருக்கிறோம். அறநிலைய துறை இந்த ஏல அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும். இல்லையெனில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.