வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்றக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருகி வரும் பயிர்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புத்தகரம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு மூலம் இந்த ஆண்டு 750 எக்டேரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். புத்தகரம் கிராமத்திற்கு பாமனியாறு, கோரை ஆறுகள் மூலம் பாசன வசதி உள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை புத்தகரம் கிராமத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. ஆனால் 2 முறை பெய்த திடீர் மழையால் நெற்பயிர்கள் முளைத்து வளர்ந்துள்ளது.
வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம்
வளர்ந்த நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் கருகி வரும் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று புத்தகரம் விவசாயிகள் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களை காப்பாற்றக்கோரி வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருகிய பயிர்களை கையில் எடுத்து காண்பித்தனர்.
உடனடியாக புத்தகரம் பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று மன்னார்குடி கோட்டாசியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளோம். தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.