திருவண்ணாமலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலையில் விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வேளாண்மை இணை அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலராமன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பகல், இரவு பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் யூரியா உடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் உரக் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரியா முறைகேட்டிற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அரிசி, காய்கறி, எலுமிச்சை பழங்கள் போன்றவற்றை வழங்கினர்.
முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இருந்து வேளாண்மை இணை அலுவலகம் வரை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.