பாசன வாய்க்கால்களில் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பாசன வாய்க்கால்களில் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 7:30 PM GMT (Updated: 12 July 2023 7:31 PM GMT)

கோட்டூர் அருகே பாசன வாய்க்கால்களில் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

கோட்டூர் அருகே பாசன வாய்க்கால்களில் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீரின்றி அவதி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் செல்லும் முள்ளி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் பாப்பான் வாய்க்கால், பொம்மை வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலமாக கோட்டூர் மேலபுழுதிக்குடி, கீழ புழுதிக்குடி, சோமாசி, சோழங்கநல்லூர், சபாபதிபுரம், ஆண்டி கோட்டகம், விழல் கோட்டகம், சிதம்பர கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வருகிறது.

இதற்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் தான் ஆதாரமாக உள்ளது. கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒருமாதமாகியும் இந்த பகுதிக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதி கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் அவதிப்படுகின்றன.

நேரடி நெல் விதைப்பு

பொதுமக்களும் குடிநீருக்காக சிரமப்பட வேண்டி உள்ளது. மேலும் இந்த பகுதியில் மேட்டூர் அணை தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் 500 எக்டேர் நிலப்பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழை காரணமாக வயல்களில் முளைத்த பயிர்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. இன்னும் சில பகுதிகளில் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

எனவே இந்த பகுதிகளை சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு பாப்பான் வாய்க்கால், பொம்மை வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்களில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று சோமாசி கிராமத்தில் உள்ள சட்ரஸ் அருகே வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் அரை மணிநேரம் நடந்தது.


Next Story