உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்


உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்
x

உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

தஞ்சாவூர்

திருவையாறில் புறவழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாயவிளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புறவழி சாலை

திருவையாறு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு ரூ.191 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி புறவழி சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளைநிலங்களில் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர் போராட்டம்

அரசூர், கண்டியூர், நடுபடுகை, தில்லைஸ்தானம், அந்தணர் குறிச்சி, விளாங்குடி ஆகிய சாலை வரை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போது கண்டியூர் பகுதியில் உள்ள விவசாயிகள் காட்டுக்கோட்டை பாதை அருகே விளைநிலங்களில் உள்ள நெற்பயிர் மீது மண்ணை கொட்டி மூடுவதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உடனடியாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என கூறினர். அதில் கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கும், அதில் உள்ள வாழை மரங்கள், நெல்மணிகள் ஆகிய பயிர்களுக்கும் உரிய இழப்பீடு ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.

முற்றுகை போராட்டம்

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக்கொண்டனர். ஆனால் உறுதியளிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறி கண்டியூர் காட்டுக்கோட்டை பாதை அருகே பைபாஸ் சாலை அமைக்கும் பகுதியில் விவசாயிகள் கருப்பு கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ், அபிஷேக், நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்னை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் இன்னும் ஒரு வார காலத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story