மண்டை ஓடுகளை வைத்து விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

மண்டை ஓடுகளை வைத்து விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது. காவிரி மேலாண்மை ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். அதை தமிழக அரசு வற்புறுத்தி கேட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 54-வது நாளான நேற்று விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், மண்டை ஓடுகளை வைத்து சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விவசாயிகளுக்கு உரிய விளைச்சலுக்கு லாபகரமான விலையும் கிடைக்கவில்லை. தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் ஒருவேளை உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனை உணர்த்தும் வகையில் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---






