காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் விரைவுபடுத்தப்படுமா?
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தென் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தென் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்
சிவகங்கை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பெருமளவில் நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு பெரிய அளவில் தொழிற்சாலை ஏதும் கிடையாது. விவசாயம் செய்வதிலும் பெரும்பாலும் கிணற்று பாசனமே அதிகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஒரு பகுதி வைகை பாசனத்திலும் மற்றொரு பகுதி பெரியார் பாசனத்திலும் பயன்படுகிறது. இவைகளில் எல்லா காலங்களிலும் தண்ணீர் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலைதான் உள்ளது. இம்மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்தால் மட்டுமே விவசாயத்தை காக்க முடியும் என்ற நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகவே எப்போதும் உள்ளது.
தற்போது வங்கக்கடலில் புயல் உருவானபோது சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில்கூட போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும் முழுமையாக செய்ய முடியாத நிலையில் உள்ளது. தொடர்ந்து பருவமழை தவறுவதால் ஆண்டுதோறும் இம்்மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் காவிரி ஆறு பாயும் பகுதிகளில் மழைக்காலத்தில் உபரியாக வரும் ஏராளமான தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
காமராஜர் ஆட்சியில்...
மன்னர் ஆட்சி காலம் தொட்டே காலம் காலமாக இங்கு நிலவும் வறட்சியை போக்கவும், மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி ஆற்று பகுதியில் வரும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்கவும் காவிரி தண்ணீரை கால்வாய் மூலம் வறண்ட சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ளடக்கிய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்திட திட்டமிடப்பட்டது. புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் முயற்சியால் திருச்சி அடுத்த மாயனூரில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. அங்கிருந்து கால்வாய் மூலம் காவிரி தண்ணீரை கொண்டு வந்து வைகை-குண்டாறுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. 1933-ம் ஆண்டு மாயனூரில் மதகு அணை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. பின்னர் பாதியிலேயே அது நிறுத்தப்பட்டு விட்டது.
1958-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக காமராஜர் இருந்தபோது ரூ.189 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2008-2009-ம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3290 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த மதிப்பீடு ரூ.5166 கோடியாக உயர்ந்தது.
நிரந்தர தீர்வு
இந்த திட்டத்தின்படி மாயனூரில் இருந்து 20 மீட்டர் அகலம் உள்ள கால்வாய் வெட்டி 256 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறில் இணைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக சென்றடையும். இத்திட்டத்தை செயல்படுத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். அத்துடன் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தென்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ள இந்த திட்டம் குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
பணிகளை தொடங்க வேண்டும்
எம்.அர்ச்சுனன், பொதுச்செயலாளர், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சிவகங்கை:- 20 ஆண்டுகளாக விவசாயிகள் கூட்டமைப்பு இந்த திட்டத்தை நிறைவேற்ற கோரி முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை வலியுறுத்தி உள்ளோம். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். கடந்த 21-2-2021-ல் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்திற்கு விராலிமலையில் அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். 2021-ல் அ.தி.மு.க. ஆட்சியில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து 2022 தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிதி நிலை அறிக்கையில் 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாயனூர் கதவணை ஜீரோ பாய்ன்ட்டில் இருந்து 55-வது கிலோமீட்டர் வரை நான்கு சிப்பங்கள் (Backage) டெண்டர் விடப்பட்டு கால்வாய் வெட்டும் வேலைகள் நடந்து வருகிறது.
தற்போது மாயனூரில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தூரம் வரை முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் தூரம் இரண்டாம் நிலையாகவும், வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிலோமீட்டர் தூரம் மூன்றாவது நிலையாகவும், கால்வாய் வெட்டும் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நிலைகளிலும் ஏக காலத்தில் நிலங்கள் ஆர்ஜிதம் செய்து டெண்டர் விட்டு பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அத்துடன் இத்திட்டம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்த 7000 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இது சம்பந்தமாக மத்திய அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்.
விரைந்து செயல்படுத்த வேண்டும்
ராம.முருகன், விவசாயி, குருந்தங்குளம் மானாமதுரை:- காவிரி -வைகை- கிருதுமால் -குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் கால்வாய் அமைக்கும்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து பள்ளத்தூர், மானகிரி, கல்லல், பாகனேரி, ஊத்திக்குளம், கீழக்குளம், இடைக்காட்டூர் வழியாக வைகை ஆற்றை வந்தடைகிறது. அங்கிருந்து கட்டனூர் வழியாக கிருதுமால் கடந்து கிருஷ்ணாபுரம் புதுப்பட்டியில் குண்டாறுடன் இணையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி, பாகனேரி, ஊத்திக்குளம், கீழக்குளம் ஆகிய இடங்களில் பாசனத்திற்கு தண்ணீரை பிரிக்கும் மதகுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை பாகனேரியில் இருந்து மதகுபட்டி வழியாக கொண்டு வந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் பல ஆயிரம் ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும்.
கடும் வறட்சி
திருவாடானையை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு:-
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் 7 மாவட்டங்கள் பயன்பெறும். மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும். சுமார் 250 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என பல ஆண்டு காலமாக தொடர்ந்து அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.. இந்த ஆண்டு காவிரி, வைகையில் போதிய அளவு தண்ணீர் வந்தும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பயன் தரவில்லை. வீணாக கடலில் தான் கலந்துள்ளது. தொடர்ந்து ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக காவிரி வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை தொடங்க வேண்டும். வைகை தண்ணீரால் பாசன வசதி பெறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் 25 சதவீதம் அளவிலேயே நிரம்பி உள்ளது.. எனவே ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாமல் 7 மாவட்டம் மக்கள் பயன்பெறும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.