வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க விவசாயிகள் கோரிக்கை
காவல்காரன்பட்டியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்ல பஸ் வசதிகள் அமைத்து தர வேண்டும்.
நடந்தை கிராமத்தில் தார் சாலை அமைத்து தர வேண்டும். மாயனூர் மணவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயத்திற்கு தேவையான யூரியா வழங்க வேண்டும்.
மாயனூர் கதவணைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆத்தூர் வழி பாரப்பட்டி பிரிவு சாலையில் தார் சாலை அமைத்து தர வேண்டும்.
புகழூர் வாய்க்காலில் உள்ள பாலித்தீன் பைகளை அகற்ற வேண்டும். கருங்காலப்பள்ளியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும். மயான கொட்டை அமைத்து தர வேண்டும். வீரியம்பட்டியில் பள்ளி அருகில் உள்ள கிணற்றினை மூட வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
பிச்சம்பட்டியில் கிளை நூலகம், தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். கூனம்பட்டி தென்னிலை மேல் பாகத்திற்கு குடிதண்ணீர் வர ஏற்பாடு செய்து தர வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். கட்டளை பாலராஜபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்து தர வேண்டும். தெருநாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்கு கால்நடை மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்த வேண்டும். குறிஞ்சி நகர் என்று பெயர் மாற்றப்பட்ட கிராமத்திற்கு பெயர் பலகை மற்றும் அனைத்து விதமான சான்றுகள் வழங்க வேண்டும்.
வீரராக்கியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். விஸ்வநாதபுரி கிராமத்தில் கழிப்பறை கட்டித் தர வேண்டும். லாலாபேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். காவல்காரன்பட்டியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கீழவெளியூர் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், கடவூர் வட்டத்தில் உள்ள பொன்னணியார் நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காவினை சுற்றுலாத்துறை மூலம் புனரமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். அதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கும், நீதிமன்ற வளாகத்திற்கும் இடைபட்ட பகுதியில் உள்ள 4.5 ஏக்கர் அளவுடைய பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் பூங்கா அமைப்பதற்காக பணிகள் நடைபெற உள்ளது, என்றார்.
தொடர்ந்து 4 பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.