ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாட்டை கண்டித்துகுறிஞ்சிப்பாடியில் விவசாயிகள் சாலை மறியல்


ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாட்டை கண்டித்துகுறிஞ்சிப்பாடியில் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:46 PM GMT)

குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்


குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே சிதம்பரம் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை விற்பனைக்காக எடுத்து வருவார்கள்.

தற்போது, மணிலா அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் அதிகளவில் மணிலாவை எடுத்து வருகிறார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 மூட்டைகள் என்கிற நிலையில் மணிலா வரத்து இருக்கிறது. ஆனால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த அளவே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மணிலா மூட்டைகள் தேக்கம் அடைவதுடன், விவசாயிகள் அங்கு 3 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

திருட்டு

மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து, வெளியூர் வியாபாரிகளை உள்ளே விடாமல் இருப்பதால் தானியங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்கிற குற்றசாட்டை விவசாயிகள் முன்வைத்து வருகிறார்கள். அதேபோன்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கடந்த சில மாதங்களாக இயங்காமல் உள்ளது. இதை பயன்படுத்தி, விவசாயிகள் எடுத்து வரும் மணிலா மூட்டைகளை இரவு நேரத்தில் சிலர் திருடி செல்வதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சாலை மறியல்

மணிலா மூட்டைகள் கொள்முதல் செய்யாப்படாமல் தேக்கம், உரிய விலை கிடைக்காதது, திருட்டு சம்பவங்கள், சாக்குமாற்றுவதற்கு சாக்குகள் பற்றாக்குறை என்று அங்கு நிலவும் பல பிரச்சினைகளை சரிசெய்ய கோரி நேற்று காலை விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு குறிஞ்சிப்பாடி- சிதம்பரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவும், பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனக் கூறி சமாதானப்படுத்தினார். இதையேற்று அவர்கள் மறியலைகைவிட்டு கலைந்து சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story