அரசு பஸ்சை மறித்து விவசாயிகள் சாலை மறியல்


அரசு பஸ்சை மறித்து விவசாயிகள் சாலை மறியல்
x

தஞ்சை அருகே ஆலக்குடியில் தேங்கி கிடக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி அரசு பஸ்சை மறித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே ஆலக்குடியில் தேங்கி கிடக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி அரசு பஸ்சை மறித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பலத்த மழை

தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தஞ்சை அருகே வல்லம், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்பட பல இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக சாலைகளில் காய வைக்கப்பட்டு வந்த விவசாயிகளின் நெல் குவியல்கள் மழை நீரில் மீண்டும் நனைந்தது.தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 80 சதவீதம் நெல் அறுவடை நடந்துள்ளது.

கொள்முதல்

பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளும் நடக்கிறது. நெல் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டும் பிடிக்கப்படுவதால் விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலைகளில் காயவைத்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் இரு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஆலக்குடி அரசு மேல்நிலை பள்ளியின் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வெகுநாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மாலை பூதலூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற‌ அரசு பஸ்சை ஆலக்குடியில் விவசாயிகள் வழிமறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டு்ம் என கோஷம் எழுப்பினர்.இது குறித்து தகவலறிந்து தஞ்சை தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீபாவளி

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லை விற்றால்தான்பண்டிகையை விவசாயிகள் கொண்டாட முடியும் என்ற நிலையில் காலதாமதம் இன்றி விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story