வேளாண்மை கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்


வேளாண்மை கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 22 July 2023 12:12 AM IST (Updated: 23 July 2023 3:19 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 3 நாட்கள் நடக்கும் வேளாண்மை கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில் 2023-24 -ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருச்சியில் வேளாண்மை கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இக்கண்காட்சி வருகிற 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் வேளாண்மையை எளிமை படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான வேளாண்மை பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள், பாரம்பரியமிக்க மரபுசார் தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.

மேலும், வேளாண்மை விளை பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் எந்திரங்கள், பசுமை குடில் தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுசார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

எனவே ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story