இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

“ஆரோக்கியமான உணவு, நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்” என்று குற்றாலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

தென்காசி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தார். அவர் குற்றாலத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'என் இனிய விவசாயிகளுக்கு எனது அன்பான வணக்கம்' என்று தமிழில் பேசினார். அப்போது விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குற்றாலம் வரலாற்று சிறப்புமிக்கது. வடபுறத்தில் காசி இருப்பது போன்று தென்புறத்தில் தென்காசி உள்ளது. இந்த பகுதி தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களை உருவாக்கிய பகுதி. கடந்த 11-ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய பகுதியில் இருந்து அயல்நாட்டினர் படையெடுத்து வந்து வடபுறத்தில் இருந்த நமது கலாசாரங்களையும், பாரம்பரிய சின்னங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர். அவற்றை நாம் விட்டு விடக்கூடாது என்றும், வருங்கால சந்ததியினருக்கு அதை கூற வேண்டும் என்பதற்காகவும் தென்பகுதியில் பராக்கிரம பாண்டியன் மன்னர் கலாசாரங்களையும், பாரம்பரிய சின்னங்களையும் உருவாக்கினார். இது ஒரு தீர்த்த கட்டம். இங்கு வந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் மேல்நிலை வகுப்பு படிக்கும்போது என்னை விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொண்டேன். எங்கள் குடும்பத்தினர் கரும்பு, கோதுமை போன்ற பயிர்களை பயிர் செய்தனர். என்னை ஒரு அரசு அதிகாரியாகவோ அல்லது கவர்னராகவோ பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் ஒரு விவசாயி. இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் எல்லாம், வேதிப்பொருட்கள் இல்லாத விஷத்தன்மை இல்லாத பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். இயற்கை விவசாயத்தின் மூலமே வருங்காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவை, நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். எனவே விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்.

தற்போது தட்பவெப்ப நிலை மாறுபாடு பல்வேறு பகுதிகளிலும் பேசப்படுகிறது. புவி வெப்பமயமாகிறது. கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கணிக்க முடியாத காலநிலை உள்ளது. இன்னும் 4, 5 அல்லது 10 ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகள் இந்த சூழ்நிலையால் பாதிக்கப்படும். மனித சமுதாயம் எண்ணற்ற இன்னல்களை சந்திக்கும். பல நாடுகள் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையை மாற்றக்கூடிய சக்தி இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே உள்ளது.

நாம் வழிகாட்டிய இதுபோன்ற விவசாயம் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே உலக நாடுகள் 2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக கொண்டாடுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி 'லைப்' என்ற திட்டத்தை அறிவித்தார். இதனை ஐ.நா. சபை எடுத்துக்கொண்டது. இந்த திட்டத்தில் நமது விவசாயம் மற்றும் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதெல்லாம் கூறப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. உலகில் இருக்கும் தொழில்களுக்கெல்லாம் தலையாய தொழில் விவசாயம் தான். நமது தொழில்களை 3 வகையாக பிரிக்கலாம். இதில் முதல் இடத்தில் இருப்பது விவசாயம் தான். அதற்கு அடுத்து வணிகம். அடித்தட்டில் இருப்பது அரசாங்க ஊழியர்கள்.

நான் சென்னையில் இருக்கும்போது எஸ்டேட்டுகளுக்கு சென்று பார்வையிட்டேன். அப்போது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆவணங்களை பார்த்தேன். அதில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 7 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்திருப்பதை கண்டேன். ஜப்பான் நாட்டை காட்டிலும் நாம் அதிகளவு நெல் உற்பத்தி செய்துள்ளோம். நம்மிடம் வேதிப்பொருட்கள் இல்லாத, பூச்சிக்கொல்லி இல்லாத உணவுப்பொருட்கள் இருந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை நாம் மறந்து விட்டோம். எனவே மீண்டும் நாம் இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். வளமான பாரதத்தை உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினார். முன்னதாக செங்கோட்டை சங்கர சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் வேளாண் அலுவலர் ஷேக் மைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் மண்பாண்டம் தயாரிப்பு கூடத்துக்கு சென்று பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் சிவசைலம் பகுதியில் உள்ள அவ்வை ஆசிரமத்துக்கு சென்று காது கேளாத குழந்தைகளை சந்தித்தார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்ரீதர் வேம்பு உடன் இருந்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


Next Story