நெல் சாகுபடிக்கான பணிகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


நெல் சாகுபடிக்கான பணிகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
x

நெல் சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரம்பலூர்

நெல் சாகுபடி

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவமழை முன்கூட்டியே பெய்துள்ளதால், விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரம்பலூர் நகரின் மத்திய பகுதியான கலெக்டர் அலுவலக சாலை, விளாமுத்தூர் சாலை, எளம்பலூர் சாலை, நடேசன் நகர், உப்புஓடை ஆகிய பகுதிகளிலும், நகர எல்லைக்கு உட்பட்ட பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் பெரிய, சிறிய ஏரி, ஆயக்கட்டு பகுதிகளிலும், துறையூர் சாலையில் அரணாரையிலும் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

தற்போது சம்பா சாகுபடி நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா, குறுவை மற்றும் நவரை ஆகிய 3 பருவத்திலும் மொத்தம் 6 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பில் நெல்சாகுபடி செய்ய இலக்கீடு செய்யப்பட்டு நாற்றங்கால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடுதுறை (ஏ.டி.டி.) -45, கோ-50, கோ-51, திரூர்குப்பம் (டி.கே.எம்.) -13, பாபட்லா ஆந்திராபொன்னி, சம்பா மசூரி ஆகிய ரகங்கள் பரவலாக பயிரிடப்படுகின்றன. பெரம்பலூர் வட்டாரத்தில் நொச்சியம், புதுநடுவலூர், செஞ்சேரி, பாளையம், ரெங்கநாதபுரம், சத்திரமனை, வேலூர், பச்சைமலை சாரலில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னமங்கலம், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை, விசுவக்குடி, வெங்கலம், தழுதாழை, அரும்பாவூர், மேலகுணங்குடி, பூலாம்பாடி, வேப்பூர் வட்டாரத்தில் வெள்ளாற்றங்கரை ஓர கிராமங்கள், ஆலத்தூர் வட்டாரம் செட்டிகுளம், மருதடி, நாட்டார்மங்கலம், புஜங்கராயநல்லூர், அய்யலூர் மற்றும் மருதையாற்றின் கரையோர கிராமங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாலும், தென்மேற்கு பருவமழை காலத்தில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த மழையினாலும் அரும்பாவூர், பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் பெரியஏரி, உள்ளிட்ட ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளன.

நாற்றுவிடும் பணி

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கு அதிகமாகவே பெய்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி செய்வதற்காக தங்களது நிலத்தை தயார் செய்து நாற்றுவிடும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Next Story