ஆன்லைன் முறை கொள்முதலுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை


ஆன்லைன் முறை கொள்முதலுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு:    செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:46 PM GMT)

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் முறை கொள்முதலுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்


செஞ்சி,

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் எடுத்து வரும் தானியங்களை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக விலை போட்டு கொள்முதல் செய்திட அ ரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.அதன்படி, நேற்று செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆன்லைன் முறை கடைபிடிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யவும் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

முற்றுகை போராட்டம்

இதனால், விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து வந்து, விவசாயிகளை சமாதானம் செய்தனர். மேலும், அங்கிருந்த அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடனடியாக சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது.

பொருட்களை எடுத்து வர வேண்டாம்

இதையடுத்து, வியாபாரிகளுடனான இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டுவர வேண்டாம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story