விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம்
விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விவசாயத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பத்மாவதி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் கோயில் ராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தமிழக விவசாய சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கொள்முதல்
காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். இ.நாம் திட்டத்தின் கீழ் பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும். ராஜபாளையத்தில் உழவர் சந்தை மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.
வனவிலங்கு அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அவர்கள் வலியுறுத்தினர் பல கூட்டங்களில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென புகார் தெரிவித்தனர். மேலும் வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்று எழுதிய அட்டையையும் தங்கள் சட்டைகளில் அணிந்திருந்தனர்.
பயிர்ச்சேதத்திற்கு இழப்பீடு
தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் வீரசெல்லையாபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் வாங்கியுள்ள நிலத்தில் வேலி அமைத்துள்ளதால் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை இல்லாத நிலை உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த கலெக்டர், காட்டு பன்றிகளால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்திற்கு இழப்பீடு வழங்கவும், காட்டு பன்றி பிரச்சினைக்கு தீர்வு காணவும், உர விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.