காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்


காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

திருச்சி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஈடுபடுகிறார்கள். 43-வது நாளான நேற்று திருச்சி அருகே முத்தரசநல்லூர் காவிரி ஆற்றில் இறங்கி மாலைகட்ட பயன்படுத்தப்படும் மாசிபச்சை பயிரினை காவிரி ஆற்றின் மணல் பகுதியில் நட்டு வைத்து போராட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் பெட்ரோல், டீசல், மீத்தேன், நிலக்கரி, ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை எடுக்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த மறுக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டிய நிலையில் பிரதமர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவை வலியுறுத்தாமல் இருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார். இந்த நிலையில் மாலை வரை பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் அவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். ஜீயபுரம் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் ஆதரவு தெரிவிப்பதற்காக முத்தரசநல்லூர் காவிரி ஆற்று பகுதிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, அய்யாக்கண்ணுவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி அழிந்து விட்டது, சம்பா சாகுபடி செய்ய வேண்டுமா? வேண்டாமா என்று கூட தமிழக முதல்-அமைச்சர் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் மவுனம் காத்து வருவது விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


Next Story