ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை கண்டித்துசங்கராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்ஒரு மாதமாகியும் பணம்பட்டுவாடா செய்யாததால் ஆத்திரம்


ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை கண்டித்துசங்கராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்ஒரு மாதமாகியும் பணம்பட்டுவாடா செய்யாததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

சங்காராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு மாதமாகியும் பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு சேஷசமுத்திரம், பெரியகொள்ளியூர், தொழுவந்தாங்கல, ஊராங்காணி, காட்டுவன்னஞ்சூர் மற்றும் பல்வேறு கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் தானியங்களை விற்பனைக்காக எடுத்து வருவார்கள்.

அந்த வகையில், ஒரு மாதத்துக்கு முன்பு சோளம் மற்றும் நெல் போன்ற தானியங்களை எடுத்து வந்து விவசாயிகள் விற்பனை செய்தனர். இதில் 55 விவசாயிகளுக்கு சுமார் ரூ.18 லட்சத்தை இதுவரைக்கும் பட்டுவாடா செய்யப்படவில்லை.

சாலை மறியல்

விவசாயிகள் பலமுறை வந்து கேட்டும், அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொடுக்காமல், காலம் கடத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தை கண்டித்து நேற்று, அந்தபகுதியில் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரணவன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பணம் பட்டுவாடா செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story