விவசாயிகள் போராட்டம்


விவசாயிகள் போராட்டம்
x

பயிர்காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

பயிர்காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், உதவி கலெக்டர் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.எஸ். சுவாமிநாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி

கூட்டத்தில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் விவசாயிகள் சேதுராமன், சுந்தரமூர்த்தி ஆகியோர் பேசுகையில்,

2022-2023-ம் ஆண்டில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட பரப்பிற்கு பயிர் காப்பீட்டுக்கு மத்திய அரசு ரூ.824 கோடியும், தமிழக அரசு ரூ.1375 கோடியும், விவசாயிகள் பங்களிப்பாக ரூ.120 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இழப்பீடாக ரூ.560 கோடி மட்டுமே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காப்பீட்டு கம்பெனிகளின் பங்காக ஒரு பைசா கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.30 ஆயிரம் நிவாரணம்

எனவே பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு அரசு வாக்களித்தபடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நேரடி விதைப்பு செய்த, நடவு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருக தொடங்கின.

எனவே குறுவை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற கடன்களை முழுவதுமாக எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்யவேண்டும் என்றனர்.

தரையில் அமர்ந்து போராட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., விவசாயிகளிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story