விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்
x

திருச்செங்கோட்டில் விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு

போராட்டம்

திருச்செங்கோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1930-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நிலம் தேவைப்பட்ட போது கைலாசம்பாளையத்தில் உள்ள ஒரு இடத்தை அரசுக்கு பணம் செலுத்தி நிலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தை ஊர்பொதுமக்கள் கோவில் பண்டிகைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலத்தை மீட்டு தரக்கோரி திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்தது. பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாயில் முன்பு முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிட்டு அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு வருமாறு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் விஜய சக்தி கூறினார். மாவட்ட கலெக்டர் வராமல் நாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என கூறி விவசாயிகள் வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறும்போது, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் பணம் கொடுத்து வாங்கிய நிலத்தை கையகப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றம் நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு நிலத்தை மீட்டுத் தரும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினார்.

இதையடுத்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த் போராட்டக் குழுவினரிடம் பேசி ஒரு வார காலத்திற்குள் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story