விவசாயிகள் காவடியுடன் ஊர்வலமாக வந்து போராட்டம்
வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காவடியுடன் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோகனூர்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கு சிப்காட் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு சிப்காட் அமைக்க கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று திரளான விவசாயிகள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று நீராடி அங்கிருந்து காவடிகளை சுமந்து கொண்டு 3 கி.மீ. ஊர்வலமாக மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வந்தனர்.
போராட்டம்
பின்னர் சாமிக்கு, பால், பன்னீர் புஷ்பம், இளநீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து, மோகனூர் பகுதியில் சிப்காட் அமையக் கூடாது என்று வேண்டிக் கொண்டனர். பின்னர் கோவிலுக்கு வெளியில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். கொ.ம.தே. கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.