தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்புக்கு மாறும் விவசாயிகள்


தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்புக்கு மாறும் விவசாயிகள்
x

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவு செய்வதை தவிர்த்து நேரடி நெல் விதைப்புக்கு விவசாயிகள் மாறி வருகிறார்கள். வேலை ஆட்கள் தட்டுப்பாடு, செலவை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி அதிகரிக்கும்.

குறுவை சாகுபடி

அதன்படி இந்த ஆண்டும் ஜூன் 12- ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரில் சாகுபடி நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இலக்கை தாண்டி 1 லட்சத்து 96 ஆயிரத்து 216 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. இதில் பம்புசெட் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டது. முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் அறுவடை பணிகள் முடிவடைந்து விட்டன.

நேரடி நெல் விதைப்பு

ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்த வயல்களில் தற்போது தான் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கர் வரை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்தன.ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகள் மற்றும், தண்ணீர் விலைக்கு வாங்கி பாய்ச்சி சாகுபடி செய்த பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பயிர்கள் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாலும், வடகிழக்கு பருவமழையும் இந்த மாத இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியாகவே உள்ளது.

வழக்கத்தை விட இந்த ஆண்டு சம்பா சாகுபடி பரப்பளவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது பம்புசெட் பகுதிகளில் சம்பா நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால் பெரும்பாலான விவசாயிகள் சம்பா நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க...

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி நடவு செய்யப்பட்டுள்ள பரப்பளவை போல நேரடி நெல் விதைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் இந்த ஆண்டு நடவுப்பணிகளை காட்டிலும் நேரடி நெல் விதைப்பில் தான் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க இது ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வோளண்மைத்துறையினரும் இதனை ஊக்குவித்து வருகிறார்கள்.

நேரடி நெல் விதைப்புக்கு நடவு செய்ய ஆகும் விதை நெல்லை விட குறைவாகத்தான் தேவைப்படும். அதிலும் தற்போது நடவு செய்வதற்கு உழுவதற்கு ஆகும் செலவு, நடவு செய்வதற்கான ஆட்கள் பற்றாக்குறை, எந்திர நடவுக்கான கூலி என அதிக செலவு ஆகும். நேரடி நெல் விதைப்புக்கு குறைந்த செலவு ஆவதோடு, களைகளை அகற்ற களைக்கொல்லி மருந்து மட்டுமே தெளிக்கின்றனர். இதனால் தற்போது விவசாயிகள் ஆர்வமான நேரடி நெல் விதைப்பு அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story