பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் விளைநிலம், மக்கள் குடியிருப்பு, ஏரிகள், பள்ளிக்கூடம், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையம் கொண்டு வருவதாக கூறி தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சீபுரம் மாவட்டக்குழு சார்பில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் விவசாய சங்கத்தினர், கிராம பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தேர்தல் வாக்குறுதியில்

மேலும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து அறிக்கை வெளியிடப்படவில்லை. சுற்றுச்சூழல் அறிக்கை உள்ளிட்டவை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அரசு திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் போது விவசாயிகள் ஒப்புதலும் இல்லாமல் நிலம் எடுக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில் நீர்நிலைகள் குடியிருப்பு பகுதிகளை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டாம் என உறுதியாக கோரிக்கை வைக்கிறோம் என விவசாய சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் மாநில துணை தலைவர் டில்லிபாபு, மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொது செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் சாரங்கன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story