ஆறுகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை


ஆறுகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை
x

கூத்தாநல்லூர் பகுதியில் ஆறுகளில் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பதால் நீரோட்டத்துக்கு தடை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் பகுதியில் ஆறுகளில் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பதால் நீரோட்டத்துக்கு தடை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெண்ணாற்றில் ஆகாயத்தாமரைகள்

நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறு ஆகிய ஆறுகளில் தற்போது தண்ணீர் செல்கிறது.

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள லெட்சுமாங்குடி பாலம் தொடங்கி, கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு, பண்டுதக்குடி பாலம், காடுவெட்டி தெரு, நாகங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம், பொதக்குடி உள்ளிட்ட ஊர்களை கடந்து செல்லும் வெண்ணாற்றில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.

துர்நாற்றம் வீசுகிறது

ஆகாயத்தாமரைகள் ஆறு முழுவதும் தேங்கி நிற்பதால், ஆற்றின் நீரோட்டம் பாதிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஆற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளால் பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

பல நாட்களாக ஆகாய தாமரைகள் ஆற்றில் தேங்கி நிற்பதால், அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆற்று தண்ணீரும் மாசுபடுகிறது. இதேபோல் கோரையாறு, வெள்ளையாறு ஆகிய ஆறுகளிலும் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்துள்ளன. எனவே கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள ஆறுகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story