யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

யூரியா உரத் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

யூரியா உரத் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

யூரியா தட்டுப்பாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களின் தட்டுபாட்டை போக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. யூரியா உடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலராமன் தலைமையிலான விவசாயிகள் திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் விவசாயிகள் அங்கேயே 3 வேளையும் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பதுக்கல்

ரூ.270 மதிப்புள்ள 45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டை ரூ.300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. யூரியா வாங்கினால் ரூ.700 மதிப்புள்ள டப்பா உரங்கள் இணை பொருட்களாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இணை பொருட்கள் வாங்கவில்லை என்றால் யூரியா கிடையாது என்கின்றனர்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விளைச்சல் அதிகளவில் உள்ளது. விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. யூரியா பதுக்கல் அதிகளவில் நடைபெறுகிறது.

தட்டுப்பாட்டால் சில தனியார் உரக் கம்பெனிகள் கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். யூரியா பதுக்கல் குறித்தும், கலப்பு உரம் விற்பனை குறித்தும் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story