குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்காததை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கருப்பு பேட்ஜ்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன், விவசாயிகள் எழுந்து சென்று கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அமர்ந்து இருந்த இடத்தின் முன்பு நின்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
குறுவைக்கு பயிர் காப்பீடு
அப்போது அவர்கள் அனைவரும், மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கவே பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால் குறுவை நெல், அறுவடை நேரத்தில் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புக்கு அரசு அறிவித்த நிவாரணம் கூட இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் 5 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். ஆனால் தமிழக அரசு இதுவரை இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை என்றனர்.
வெளிநடப்பு
மேலும் தென்னை பயிர் நீண்டகாலமாக வேளாண்மைத்துறை பட்டியலில் அங்கம் வகித்து வரும் நிலையில் தென்னை பயிரை தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்போவதாக அச்சம் நிலவி வருகிறது.
எனவே விவசாயிகள் நலனில் அக்கறை இன்றி செயல்படும் தமிழக அரசை கண்டிப்பதாக கூறிய விவசாயிகள் பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தாத மாநில அரசை கண்டித்தும், தென்னை பயிரை வேளாண்மைத்துறையில் இருந்து தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்வதை கைவிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
சில விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு விவசாயிகள் அனைவரும் கூட்ட அரங்கிற்கு சென்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.