குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு


குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
x

நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அசோக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், ''நெல்லை மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு நீர்ப்பாசன மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்து வருகிறது. இதில் பல விவசாயிகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. கணினி பட்டா உள்ளவர்கள்தான் வாக்காளர்களாக மாறமுடியும் என்ற நிலை உள்ளது. இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து விவசாயிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டும்'' என்றார்.

கானார்பட்டி ஆறுமுகம் பேசுகையில், ''நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் மழை குறைவு என்பதை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்காமல் உள்ளனர். நெல்லையை விட மழை அளவு அதிகம் உள்ள மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விட்டனர். நெல்லை மாவட்டத்தில் வறட்சி உள்ளது என்று கூறி வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறார்கள். எனவே உடனடியாக வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்'' என்றார்.

முனைஞ்சிப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் மாரிமுத்து பேசும்போது, ''முனைஞ்சிப்பட்டி சந்தையில் வாரந்தோறும் வியாபாரம் நன்றாக நடைபெறுகிறது. அங்கு விவசாயிகளின் பொருட்கள், வாகனங்கள் அடிக்கடி திருட்டு போய் விடுகிறது. எனவே சந்தை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்'' என்றார்.

விவசாயிகள் பேசும்போது, பாலம் வசதி கேட்டு பாளையங்கோட்டை யூனியன் அலுவலகம் சென்றபோது அதிகாரிகள் திட்டி அனுப்பியதாக கூறினர். அப்போது கலெக்டர் வந்ததும் இதுகுறித்து பேசுவதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று பல்வேறு கேள்விகளுக்கும் கலெக்டர் வந்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மாதம் ஒரு முறை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த முயன்ற அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக பிரதான கட்டிடத்தை விட்டு வெளியே வந்த விவசாயிகள், அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 'நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெளியே சென்றிருந்த கலெக்டர் கார்த்திகேயன், அலுவலகத்துக்கு காரில் திரும்பி வந்தார். அவர் விவசாயிகளை சந்தித்து சமரசம் செய்து, தன்னுடன் கூட்ட அரங்கிற்கு அழைத்துச்சென்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி முற்றிலும் பொய்த்து போய்விட்டது. பிசான சாகுபடி செய்வதற்கும் விவசாயிகள் கையில் ஒன்றும் இல்லை. நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு டெல்டா பகுதியை மட்டுமே விவசாய பகுதியாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் டெல்டா பகுதிக்கு பிறகு அதிக அளவு விவசாய பரப்பை கொண்ட மாவட்டமாக உள்ளது. எனவே நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.


Next Story