பன்னீர் கரும்புகளுடன் வந்த விவசாயிகள்
கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பன்னீர் கரும்புகளுடன் வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கக்கோரி குள்ளஞ்சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க அரசு பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். ஆனால் இது வரை அதற்கான எவ்வித அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை. ஆகவே விவசாயிகள் நலன் கருதி கரும்பை பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்கப்படுமா? இல்லையென்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.