குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் முதன்மை அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் முதன்மை அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கதிர்வேல், மண்டல துணை தாசில்தார் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதே சமயம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முறைப்படி அழைப்பு விடப்பட்டு இருந்த மதுரை மாநகராட்சி, குண்டாறு வடிநில பிரிவு, போக்குவரத்து பிரிவு, மின்பகிர்மான பிரிவு ஆகிய துறைகளில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதற்கிடையே பெரியாறு வைகை பாசனபொதுப்பணி துறை, ஊராட்சி ஒன்றியம், நீர்வளத்துறை உள்பட 15 பிரிவு சார்ந்த துறைகளின் முதன்மை அலுவலர்கள் பங்கேற்கவில்லை. மாறாக பல்வேறு துறையில் பணியாற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெளிநடப்பு- பரபரப்பு
இந்த நிலையில் நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மாரிச்சாமி, மகேந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் சந்தனம், விவசாய கூட்டமைப்பு தலைவர் லட்சுமணன், விவசாயிகள் மகாமுனி, தென்பழஞ்சி சிவராமன் ஆகியோர் ஒட்டுமொத்தமாக எழுந்துநின்று தங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கும், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் பொறுப்பான அதிகாரிகள் வரவில்லை. கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்பதில்லை.
குறைதீர்க்கும் கூட்டம் குறைதீர்ப்பதற்குதான். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை கேட்டு உரியநடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என கூறி கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கை
இந்த நிலையில் தாசில்தார் பார்த்திபன் செல்போன் மூலம் பிற துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவர் வெளியே வந்து விவசாயிகளிடம் கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைத்தார்
அப்போது விவசாயிகள் தங்கள் மீது எந்த குறையும் இல்லை. எங்களுக்கு உங்கள் மீது கோபம் இல்லை. பிற துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை என்றனர். இந்த நிலையில் 20 நிமிடத்திற்கு பிறகு கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டம் முடியும் தருவாயில் மாநகராட்சி, குண்டாறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.