கீழ்பவானி வாய்க்காலில் விடிய விடிய போராட்டம் நடத்திய விவசாயிகள்; பணியை நிறுத்துவதாக அதிகாரிகள் அறிவிப்பு


கீழ்பவானி வாய்க்காலில் விடிய விடிய போராட்டம் நடத்திய விவசாயிகள்; பணியை நிறுத்துவதாக அதிகாரிகள் அறிவிப்பு
x

கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள். அதனால் பணியை நிறுத்துவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ஈரோடு

பெருந்துறை

கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள். அதனால் பணியை நிறுத்துவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று விவசாயிகளில் ஒரு தரப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாசன விவசாயிகள் காஞ்சிக்கோவில் அருகே கருங்கரடு வழியே செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். கருங்கரடு, ஆயப்பரப்பு பகுதிகளைச் சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நேற்று முன்தினம் மாலை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேராட்டம் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நேரில் வந்து உத்தரவாதம் அளித்தால்தான் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று கூறி மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிறுத்தம்

மேலும் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் பந்தல் அமைத்து நேற்று முன்தினம் இரவு விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நேற்று பிற்பகல் வரை போராட்டம் தொடர்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மதன் மற்றும் அரசு அதிகாரிகள், போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வாய்க்கால் சீரமைப்பு பணிகளை நிறுத்தப்படும் என்றும், ஏற்கனவே கரையிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அதே இடத்தில் கொட்டி, பழையபடி கரையை அமைப்பது என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.


Next Story