விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களை மேம்படுத்த விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

மண் வளம் மேம்படுத்த

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் 380 மற்றும் ஊரணி, குளங்கள் (சிறிய நீர்நிலைகள்) 2112 எண்கள் உள்ளன.

இந்த ஏரிகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக காணப்படும் போது விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளம் மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் அரசு நிர்ணயித்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

விவசாயத்துக்கு மட்டும்

அதன்படி (மாட்டு வண்டி / டிராக்டர்) அரசு விதிகளின்படி காஞ்சீபுரம், கனிம வளத்துறை உதவி இயக்குனரால் உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், விவசாயிகள் சுயமுகவரியிட்ட வெள்ளைத்தாளில் 1. நிலம் அமைந்துள்ள இடம் 2. எந்த ஏரியின் பாசன பரப்பு (ஆயக்கட்டு பகுதி) 3. மொத்த பரப்பளவு அதில் எத்தனை ஏக்கருக்கு வண்டல் மண் தேவை மற்றும் அளவு போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு அத்துடன் விவசாயியின் ஆதார் எண், பட்டா நகல், ஏரி வண்டல் மண் எடுக்க பயன்படுத்தப்படும் டிராக்டர் வண்டி பதிவு எண் நகல் / மாட்டுவண்டி போன்றவற்றை இணைத்து பெறப்படும்.

ஏரி வண்டல் மண் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த என்ற உறுதிமொழியுடன் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து நில உடமை குறித்து சரித்தன்மை சான்று பெறப்பட்ட பின்னர் கணிம வளம், உதவி இயக்குநருக்கும், அந்தந்த தாசில்தார் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அந்தந்த ஏரியில் உள்ள நீர் இருப்பு அளவின் அடிப்படையில் எவ்வளவு ஏரி வண்டல் மண் (40 சதவீதம்) எடுக்க முடியும் என்ற விவரம் கணக்கீடு செய்யப்பட்டு ஏப்ரல் 2023 முதல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏரியில் இருந்து விளை நிலங்களுக்கு கொண்டு செல்லும் எந்திரச்செலவை விவசாயிகளே முழுமையாக ஏற்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும். விளை நிலங்களுக்கு என வழங்கப்பட்ட ஏரி வண்டல் மண் பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது. பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story