நெகமம் அருகே தென்னந்தோப்புகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்-தேங்காய் பறிக்க முடியாததால் விவசாயிகள் கவலை
நெகமம் அருகே தென்னந்தோப்புகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்-தேங்காய் பறிக்க முடியாததால் விவசாயிகள் கவலை
நெகமம்
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மேலும் இப்பகுதியில் உள்ள சில இடங்களில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் நிரம்பி வழிந்தன. மேலும் தென்னந்தோப்பில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழை நீரால் தென்னை மரங்களை நோய் தாக்குவதோடு, பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நீண்ட கால பயிரான தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ள நிலையில் தேங்கியுள்ள மழைநீரால் வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீர் அதிக நாட்களாக தேங்கி நின்றால் சுவாசிக்க முடியாமல் வேர்கள் வலுவிழந்து மரங்களுக்கு சத்து பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்படும். 2 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கினால் வேர்கள் இறந்து போய் அழுக துவங்கும். மேலும் மரங்கள் சாய்ந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் வாய்க்கால் வெட்டி அதன் மூலம் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி வந்தனர். மழை பெய்து 2 வாரத்திற்கு மேலாகியும், தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் தென்னந்தோப்புகள் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.