கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 14 பேர் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதில் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காய்ச்சலால் பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் அதிகளவு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பலர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆஸ்பத்திரிகளில் நாளுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தினசரி 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் தொடர் காய்ச்சலால் அவதியடைந்த கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 3 ஆண்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர்கள் காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து டெங்கு பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
மாத்திரை மட்டும்...
இதேபோல் மாவட்டம் முழுவதும் 14 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொடர்ந்து காய்ச்சலால் அவதியடைந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்டோர், டெங்கு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை கொடுத்து விட்டு, அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க, இதுவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலூர் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திகளுக்கும் நோயாளிகள் சிகிச்சைக்காக சென்றால், எவ்வித பரிசோதனையும் மேற்கொள்ளாமல் மாத்திரை மட்டுமே கொடுக்கின்றனர். 4 நாட்கள் தொடர்ச்சியாக சென்றால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்கின்றனர் என பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உரிய சிகிச்சை இல்லை
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடலூர் மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி உள்ளதால், பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும், இதுவரை எந்த வொரு பகுதியிலும் கொசு மருந்து அடிக்கப்படவில்லை. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டுகின்றனர். அதனால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதுடன், சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.