சட்டமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம்
சேலத்தில் வெள்ளை கல் திருட்டை தடுக்காவிட்டால் சட்டமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அருள் எம்.எல்.ஏ. கூறினார்.
சேலம் கலெக்டர் கார்மேகத்திடம், அருள் எம்.எல்.ஏ. மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வெள்ளக்கல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாமாங்கம் பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வெள்ளைகற்கள் (மேக்னசைட்) திருடப்படுவது குறித்து பலமுறை மனு கொடுக்கப்பட்டது. அதேபோன்று சுரங்கத்துறை, போலீசாரிடமும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த பகுதியில் 20 ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. எனவே வெள்ளை கற்கள் அரவை ஆலையை தடை செய்ய வேண்டும். வெள்ளை கற்கள் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, அனுமதியின்றி வெள்ளை கற்கள் வெட்டி கடத்தப்படுவதால் அரசுக்கு மாதம் ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. வெள்ளை கற்கள் திருட்டை தடுக்காவிட்டால் விரைவில் சட்டமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.