கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்
கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்
குடிமங்கலம்,
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வலியுறுத்தி பூளவாடியில் கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கைத்தறி நெசவு
தமிழகத்தில் தொன்மை வாய்ந்த பாரம்பரிய தொழிலாக கைத்தறி நெசவுத்தொழில் உள்ளது. நெசவுத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பூளவாடியில் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை செல்வராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சாந்தகுமார் முன்னிலை வகித்தார். கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி ரகங்களை கைத்தறிக்கே என்று உறுதிப்படுத்த வேண்டும். ஜவுளிக்கடைகளில் கைத்தறி சேலை என்று விசைத்தெறியில் உற்பத்தி செய்த சேலைகள் விற்பனை செய்வதை கண்டறிந்து அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிதியுதவி
60 வயது பூர்த்தி அடைந்த கைத்தறி நெசவாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டு நூல், ஜரிகை முதலிய மூலப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இன்றி சீரான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு வங்கி ஏற்படுத்தி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதி உதவி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச தறி, சாமான், உதிரி பாகங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் நலன் காப்பீடு திட்ட மருத்துவ அட்டை மீண்டும் இலவசமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெல்லம்பட்டி, பூளவாடி, ராமச்சந்திராபுரம், வீதம்பட்டி கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தை ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, மாசிலாமணி முடித்து வைத்தார்.