மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்
திருவலம் அருகே மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதியை மீறி...
காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த அரும்பருதி பாலாற்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு விதித்த சுமார் 400 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் என்ற அளவை காட்டிலும் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மணல் குவாரியில் மனித ஆற்றல் மூலம் மணல் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் எந்திரத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் பாலாறு அருகில் உள்ள குடிநீர் கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக சரிவடைந்துள்ளதாகவும், ஊர் அருகில் அமைய உள்ள தடுப்பணையை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் அரும்பருதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில் பாலாறு உரிமை மீட்புக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பாலாற்றில் எந்திரங்களை பயன்படுத்தி சுமார் 20 அடி வரை மணல் அள்ளப்பட்டதால் கோடை காலத்தில் சந்திக்க வேண்டிய குடிநீர் பிரச்சினையை இப்போதே சந்திக்க தொடங்கிவிட்டோம். ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அரசு மணல் குவாரியை மூட வேண்டும். இல்லை என்றால் எங்கள் கிராம மக்கள் சார்பாக தொடர்ந்து அடுத்தக் கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.