ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம் நடந்தது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், மாதர் சங்க வட்ட செயலாளர் சின்னப்பொண்ணு மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் கை.களத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், கை.களத்தூரில் இயங்கிவந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.