தந்தையின் நண்பர் போக்சோவில் கைது
தந்தையின் நண்பர் போக்சோவில் கைது
கோவை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-1 மாணவி
கோவை அருகே வசித்து வருபவர் 17 வயது சிறுமி. இவர் கோவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அந்த மாணவியோட தந்தையின் நண்பரான காளீஸ்வரன் என்ற சொக்கன் (வயது 41) என்பவர் மாணவியின் வீட்டிற்கு வந்தார். அவர் மாணவியிடம் உனது தந்தை எங்கே என்று கேட்டார். அதற்கு மாணவி தாய், தந்தை 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.
போக்சோவில் கைது
பின்னர் காளீஸ்வரன் மாணவியிடம் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என கேட்டார். மாணவி வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டுவர சென்றார். அப்போது காளீஸ்வரனும் மாணவியை பின்தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தார். மாணவி தனியாக இருப்பதை அறிந்த அவர் தனது நண்பரின் மகள் என்று கூட பாராமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் காளீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த காளீஸ்வரனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நண்பரின் மகள் என்றும் கூட பாராமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.