நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு


நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில்  தந்தை, 2 மகன்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை   மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2022 1:30 AM IST (Updated: 16 Dec 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொன்ற தந்தை, 2 மகன்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்

மேட்டூர்,

விவசாயியை தாக்கினர்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள அமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 70), விவசாயி. இவருக்கும், மேச்சேரி சாம்ராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (50), என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தனது வீட்டில் வெங்கடாஜலம் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த முத்துக்குமரனும் அவருடைய மகன்களான கன்னியப்பன் (27), கலைமணி (22) ஆகியோர் வெங்கடாஜலத்தை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர்.

தந்தை-2 மகன்கள் கைது

இதையடுத்து பற்கள் உடைந்தும், உடலில் படுகாயங்களுடன் அவர் உயிருக்கு போராடினார். பின்னர் தந்தை, 2 மகன்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனிடையே அங்கு வந்த வெங்கடாஜலத்தின் மனைவி பொன்னுத்தாய் நடந்த சம்பவம் குறித்து கணவரிடம் கேட்ட போது, முத்துக்குமரனும், அவருடைய மகன்களும் சேர்ந்து தாக்கி விட்டு சென்றதாக அவர் கூறி உள்ளார்.

உடனே படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை அவருடைய குடும்பத்தினர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமரன், அவருடைய மகன்கள் கன்னியப்பன், கலைமணி ஆகியோரை கைது செய்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமரன், அவருடைய மகன்கள் கன்னியப்பன், கலைமணி ஆகிய 3 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குமார் சரவணன் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேலு ஆஜராகினார்.

1 More update

Next Story