தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை, மகள் கைது
பண்ருட்டி அருகே தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை, மகளை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் தெரியவந்துள்ளது
பண்ருட்டி
வெல்டிங் தொழிலாளி
நெய்வேலி 30-வது வட்டம், திடீர்குப்பத்தை சோ்ந்தவர் ராமலிங்கம் மகன் ராமமூர்த்தி(வயது 39). வெல்டிங் தொழிலாளியான இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள செம்மங்குப்பத்தை சேர்ந்த ராமமூர்த்தி(65) மகள் சந்தியா(29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சபரிஸ்ரீ(9), யாழினி(6), என்கிற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராமமூர்த்தி தினமும் மது குடித்துவிட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவணவரை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் செம்மங்குப்பத்தில் உள்ள அவரது பெற்றோார் வீ்ட்டில் வசித்து வருகிறார்.
கழுத்தை இறுக்கி கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ராமமூர்த்தி, தனது மாமனார் ஊரான செம்மங்குப்பத்திற்கு மதுபோதையில் வந்ததாக தெரிகிறது. அப்போது கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. இதில் ஆத்தரம் அடைந்த சந்தியா அவரது தந்தை ராமமூர்த்தியுடன் சேர்ந்து அருகில் இருந்த கயிற்றால், கணவர் ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சந்தியா, இவரது தந்தை ராமமூர்த்தி ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
அப்போது தனது கணவரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து சந்தியா போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் வருமாறு:-
அடிக்கடி தகராறு
எனது கணவர் ராமமூர்த்தி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து என்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்தார். இதை தட்டி கேட்ட எனது தந்தை ராமமூர்த்தியையும் அவர் தாக்கினார். இது குறித்த வழக்கு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இருப்பினும் அவர் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து சித்ரவதை செய்ததால் நான் எனது குழந்தைகளுடன் செம்மங்குப்பத்தில் உள்ள எனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் இங்கு வந்தும் அவர் என்னிடமும், எனது தந்தையிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கொன்றுவிடுவதாக மிரட்டினார்
சம்பவத்துக்கு முந்தையநாள் எனது கணவர் என்னை தேடி செம்மங்குப்பத்துக்கு வந்த போது நான் வெளியே சென்று விட்டேன். நான் வீட்டில் இல்லாததை தெரிந்த அவர் அதே ஊரில் உள்ள என் தங்கை வீட்டிற்கு சென்று என்னையும், குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கூறி அவளிடம் தகராறு செய்தார். அப்போது என் தங்கை வீட்டினர் அவரை பிடித்து என்னிடம் அழைத்து வந்த போது நான் போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்றேன். உடனே அவர் என்னை போலீசில் பிடித்துக் கொடுத்தால் திரும்ப ஜாமீனில் வந்து உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். ஏற்கனவே பல தடவை என்னையும், எனது தந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்ததால் போதையில் இருந்த அவரை நானும், எனது தந்தையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டோம். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.